கவிதைகள்,
வெல்வது எப்படி?
(நான் இன்னும் ஜெயிக்கலீங்க வெற்றி பத்தி அட்வைஸ் பண்ண.. எனக்கு நானே சொல்லிக்கிறதை ஏதோ எழுதிருக்கேன். புடிச்சா சொல்லுங்க)
குதிரைக்கு லாடம்
வெற்றிக்கு மந்திரம்.
சிதறாத நோக்கம்
சாதனைக்கு சக்தி
ஒன்றில் குறி
ஒரு நாளும் தவறாது.
வென்று முடித்த போர்
ஒரு சமயம் ஒன்றுதான்.
கவிதைக்கு வைரமுத்து
கணக்குக்கு ராமானுஜர்
நமக்கென்று ஒன்றிருக்கும்
நம்ப வேண்டும் மிக முக்கியம்.
களம் மாறிப் போனால்
கணக்குமில்லை கவியுமில்லை
கவனம் மாறிப்போனால்
இலக்கு தைக்கும் அம்புமில்லை.
எது செய்வது
மனசு போடட்டும் தீர்மானம்
எப்படி செய்வது
திட்டங்கள் அறிவு போடட்டும்.
'தெய்வத்தான் ஆகாதெனினும்'
திருக்குறள் ரொம்ப சத்தியம்
மெய் வருந்தி சிந்தும் வேர்வை
வெற்றி விளைக்கும் நிச்சயம்
மறு வினாடி மரணம் போல்
இந்த வினாடி
இயக்கம் இருக்கட்டும்.
செத்த நேரம் இல்லாத வாழ்வுக்கு
திறக்காத கதவில்லை
தெறித்தோடாத தடையுமில்லை.
இலட்சியப் பாதைகளில்
பயணம் தனியேதான்
ஆனால்
இதயம் இனிதியங்க
தேவை நல்ல நட்பு.
அறிவு சலிக்கையில்
தூசு தட்டி துள்ளச் சொல்லும்
உற்சாகம் தோழமை.
மனசு களைக்கையில்
உறுதி தந்து நெம்பிவிடும்
நெம்புகோல் சினேகிதம்.
சாதனைகள் தனியேதான்
சாத்தித்தவனுக்கு ஒரு நண்பனிருப்பான்.
வெற்றியை விரும்புகிறவன்
இதயக் கதவு
திறந்தே இருக்கட்டும்
நட்புக்கும் உறவுக்கும்...
எதைச் செய்தாலும்
விதை ஆசைதான்.
வெல்லும் ஆசையை
மூச்சோடு முடிச்சுப்போட்டு
உயிராய் சுவாசிக்கும் உழைப்புக்கஞ்சா நெஞ்சம்
அதற்கும் வெற்றிக்கும் தூரம் ரொம்பக் கொஞ்சம்.
No comments:
Post a Comment